

பொது மேடையில் மக்கள் முன்பு விவாதிக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் தயாரா என்று ஆம் ஆத்மி சவால் விட்டுள்ளது.
புதுச்சேரி ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசும், மத்தியில் ஆளும் பாஜகவும் புதுச்சேரியில் ஒரு வளர்ச்சி திட்டத்தையும் தரவில்லை. புதுச்சேரியில் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊதியம் தரமுடியாமல், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல், பஞ்சாலைகளையும் மூடி விட்டனர்.
முக்கியமாக, பொதுமக்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் குழப்புகின்றனர். எப்போது பார்த்தாலும் சண்டையிட்டு ஒருவரையொருவர் குறை சொல்லி காலம் தள்ளுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நான்கரை ஆண்டுகள் முடிந்து விட்ட தருவாயில் ஆளுநரின் தலையீடுதான் அனைத்துக்கும் காரணம் என்று பொறுப்பை முதல்வர் நாராயணசாமி தட்டிக்கழிப்பது தவறான செயல்.
அன்றாட நிர்வாகத்தில் தலையிட்டு, கோப்புகளை தாமதப்படுத்தி புதுச்சேரி மக்களின் வளர்ச்சியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதும் கண்டிக்கத்தக்கது.
இவர்கள் இருவரும் பொது மேடையில் மக்கள் முன்பு பிரச்சினைகளை விவாதிக்க தயாரா என்ற சவாலை முன்வைக்கிறோம்.
இதேபோன்று, துணைநிலை ஆளுநர் ஆயிரம் தொல்லை தந்தாலும், தலையீடு செய்தாலும் அதையும் மீறி ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மிகச் சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறார். அவரிடம் இருந்து புதுச்சேரி அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆம் ஆத்மி வெளிச்சதுக்குக் கொண்டு வரும். மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.