

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வைகையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் தெரிவிக்கையில், "அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.
ஆனால், தற்போது தாமிரபரணியிலிருந்து 32 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு 20 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது திருப்புவனம் வைகை அணை பகுதியில் தண்ணீர் வருவதால் எனது முயற்சியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் தங்கியுள்ளது.
எனவே, திருப்புவனம் வைகை ஆற்றிலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்யப்படும்.
எனவே, அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதி பொதுமக்களுக்கு இனி தட்டுப்பாடின்றி 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும்" என்றார்.