

முதல்வர் ஜெயலலிதா இன்று 476 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் பல திட்டங்களை அடிக்கல் நாட்டியும், திறந்தும், துவக்கியும் வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், 107 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டிடங்களை திறந்து வைத்து, 159 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவத் துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 9 உயர் சிறப்பு பிரிவுகள் மற்றும் 400 படுக்கை வசதிகளுடன் நிறுவப்பட்ட தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 21.2.2014 அன்று முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இந்திய மருத்துவ குழும விதிகளின்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான நிர்வாகக் கட்டிடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடம், நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டின் 20-வது மருத்துவக் கல்லூரி ஆகும். இப்புதிய மருத்துவக் கல்லூரி சென்னையில் 55 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1960-க்கு பிறகு திறந்து வைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ஆகும்.
இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவ குழும விதிகளின்படி தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 410 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இப்புதிய மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 12 கோடியே 24 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதி கிடைக்கப் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் தொடங்கப்படும் இருபதாவது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1945 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் இருந்தன. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த நான்காண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 710 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு தற்போது மொத்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் 2655-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, முட நீக்கியல் பிரிவு ஆகியவற்றிற்கு 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம்; சென்னை அரசு பொது மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண் உயிரியல் ஆய்வகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 கோடியே 37 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம்; சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் மாணவிகளுக்காக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்கள்; கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடம் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நுண் உயிரியல் ஆய்வகக் கட்டிடம்; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டிடம் மற்றும் போதை தடுப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போதை தடுப்பு மையம்; தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போதை தடுப்பு மையம், வைரஸ் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை ஆய்வகக் கட்டிடம்; சென்னை கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வகக் கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் - பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டம் - மாவட்ட தலைமை மருத்துவமனை, பெருந்துறை மற்றும் கோபிச்செட்டிபாளையம், பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஆகிய அரசு மருத்துவமனைகளில் 13 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மருந்துப் பொருட்கள் கிடங்கு, ஒருங்கிணைந்த அவசரகால தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவு, நவீன சமையல் கூடம், யோகா மற்றும் இயற்கை வைத்திய மருந்தகம், அடிப்படை கண் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்தியமுறை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் 1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம்; சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் அலுவலகத்திற்கு தரை மற்றும் நான்கு தளங்களுடன் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடம்; ஈரோட்டில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகக் கட்டிடம்; நீலகிரி, சேலம், தஞ்சாவூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், தருமபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகப்பட்டினம், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்; 22 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள்; 33 துணை சுகாதார நிலையங்களுக்கு 5 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்; 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் - மொட்டம்பட்டியில் மருத்துவ அலுவலர்களுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 குடியிருப்பு கட்டிடங்கள்; விழுப்புரம் மாவட்டம் - மொட்டம்பட்டியில் மருத்துவமனை பணியாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 குடியிருப்பு கட்டிடங்கள்; சென்னை - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வளாகத்தில் 26 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவசரகால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைப்புகள் பயிற்சி நிலையக் கட்டிடம் என மொத்தம் 307 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்வேறு சிறப்புப் பிரிவுகளுக்கான அடுக்குமாடிக் கட்டிடம்; சென்னை அரசு பொது மருத்துவமனையில் 58 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புற நோயாளிகள், முட நீக்கியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் மருத்துவப் பிரிவுகளுக்கு 19 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 159 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 9 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சி.டி. ஸ்டிமுலேடர் டிஜிட்டல் எக்ஸ்ரே, மேம்படுத்தப்பட்ட புற நாடித்துடிப்புக் கருவி, மிகையளவு அண்மைக் கதிர்வீச்சு பிரிவு ஆகிய மருத்துவ உபகரணங்களின் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவால் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் அடிக்கல் நாட்டியும், திறந்தும், துவக்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 476 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.