பணம் தந்து குடிக்க தண்ணீர் வாங்குமாறு கூறிய டோமினோஸ் நிறுவனம்; புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புகார் தந்த வாடிக்கையாளர்: இன்று முதல் தண்ணீர் தர ஏற்பாடு

புதுச்சேரியில் உள்ள பீட்சா நிறுவனத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள தண்ணீர்.
புதுச்சேரியில் உள்ள பீட்சா நிறுவனத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள தண்ணீர்.
Updated on
1 min read

வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து பணம் தந்து வாங்க டோமினோஸ் நிறுவனம் வலியுறுத்தியதால், அவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு புகார் தந்தவுடன் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து இன்று முதல் தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் செயல்படும் டோமினோஸ் பீட்சா பன்னாட்டு நிறுவனத்தின் புதுச்சேரி கிளை மிஷன் வீதி - ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் செயல்பட்டு வருகிறது. நேற்று (அக். 14) அங்கு பீட்சா வாங்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர், தாகம் எடுத்தவுடன் ஊழியர்களிடம் தண்ணீர் தர கோரினார். அதற்கு, தண்ணீரை பணம் தந்து வாங்கிக்கொள்ளவும் என்று தெரிவித்துள்ளனர்.

உணவகங்களில் தண்ணீரை வாடிக்கையாளருக்கு இலவசமாக தரவேண்டியது கடமை என்று அவர் அறிவுறுத்தியும் தண்ணீரை தர மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து, "விருப்பமில்லாவிட்டால் பீட்சா ஆர்டரை ரத்து செய்து விடுங்கள்" என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதனால் வாடிக்கையாளர், ஆளுநர் மாளிகை புகார் பிரிவை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, பெரியக்கடை காவல் துறையினர் பீட்சா நிறுவனத்துக்கு வந்தனர். உணவகத்தில் தண்ணீர் வைக்காதது தொடர்பான புகார் தொடர்பாக விசாரித்தனர். அதற்கு கரோனா காலம் என்பதால் வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் சேவையை தரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, இன்று (அக். 14) முதல் தண்ணீர் வைப்பதாக உறுதி தந்தனர்.

இதுதொடர்பாக, சமூக வலைதளத்திலும் வீடியோ பரவியது. இதுபற்றி பெரியக்கடை காவல் துறையினரிடம் விசாரித்தபோது, "பீட்சா நிறுவனத்தில் குடிநீர் தரவில்லை என்று ஆளுநர் மாளிகைக்கு புகார் ஒன்றை வாடிக்கையாளர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அங்கிருந்து வந்த தகவல்படி விசாரித்தோம். வாடிக்கையாளருக்கு உணவகத்தில் தருவதுபோல் தண்ணீர் தரவில்லை. அது தவறு. தண்ணீர் தரவேண்டும் என்று சென்னை தலைமை அலுவலகத்திலும் தெரிவித்தோம். அவர்கள் இன்று ஏற்பாடு செய்துள்ளதை உறுதிப்படுத்திவிட்டோம்" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in