

வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கயத்தாறு அருகே ஓலைக்குளத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் ஆடு மேய்க்கும் ஏற்பட்ட தகராறில் காலில் விழ செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய ஓலைக்குளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவசங்கு (60), அவரது மகன் சங்கிலிபாண்டி(19), உறவினர் பெரியமாரி(47), இவரது மகன் மகேந்திரன்(20), பெரியமாரியின் சகோதரர் வீரையா(42), மகாராஜன்(24), கார்த்திக்(24) ஆகிய 7 பேர் மீது கயத்தாறு போலீஸார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஓலைக்குளம் கிராமத்துக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் வந்து, பால்ராஜை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கயத்தாறு வட்டம் ஓலைக்குளம் கிராமத்தில் பால்ராஜ்(55) என்பவர் ஆடு மேய்க்கும் போது வன்கொடுமை சம்பவம் நடந்தது.
இது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை கவனத்துக்கு வந்தது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் என்ன பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து, பால்ராஜிக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நான் நேரடியாக பால்ராஜை சந்தித்து பேசினேன். அப்போது, அவரது குடும்பத்துக்கு பட்டா உள்ளிட்ட சில கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
உடனடியாக நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பால்ராஜிக்கு வீட்டுமனை பட்டா, பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடைபெற கூடாது என்று தான் நான் நேரில் வந்து பேசினேன். நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தார்.
இந்தக் காலத்தில் வன்கொடுமை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தீண்டாமை, வன்கொடுமை செய்தால் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம், என்றார் அவர்.
ஆட்சியருடன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பரிமளா, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், காவல் ஆய்வாளர் முத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.