Published : 18 Sep 2015 08:23 AM
Last Updated : 18 Sep 2015 08:23 AM

2000 கன்டெய்னர்களில் சீனப் பட்டாசு பதுக்கல்? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரம் கன்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, வட இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

சீன பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கவும், சட்டவிரோதமாக அவை விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சிவகாசியை சேர்ந்த கே.கே.சி.பாலகணேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

“பாதுகாப்பு நலன் கருதி அதிக ஆபத்து நிறைந்த சீன பட்டாசு ரகங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கெனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சீனப் பட்டாசுகள் விற்கப்படுகின்றன. 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என அந்த மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடும்போது, “கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரம் கன்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாகவும், அவை வட இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சுங்கத் துறையின் கண்காணிப்பையும் மீறி சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீன பட்டாசுகள் மிகவும் ஆபத்தானவை” என்றார்.

அப்போது, “சீனப் பட்டாசுகள் இருப்பதாக பொதுவாக கூறக்கூடாது, குறிப்பிட்டு, எந்த இடத்தில் விற்கப்படுகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும்” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் ஏற்கெனவே சீனப் பட்டாசுக்கு எதிராக மனு தாக்கல் செய்து, அந்த மனு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே விஷயத்துக்காக மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

இதையடுத்து, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x