சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளருக்கு  ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளருக்கு  ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் சிறையிலுள்ள சார்பு ஆய்வாளர் ரகுகனேஷூக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீஸார் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். காவலர்கள் பலரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில், இரட்டை கொலை வழக்கில் மனுதாரர் 3 வது குற்றவாளியாக உள்ளார். தந்தை, மகன் சித்திரவதை செய்யப்பட்டதில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இரட்டை கொலை தொடர்பாக இதுவரை 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது. சிபிஐ பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை நவ. 3-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in