Last Updated : 14 Oct, 2020 01:12 PM

 

Published : 14 Oct 2020 01:12 PM
Last Updated : 14 Oct 2020 01:12 PM

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அமலாகும் வரை தேர்வு முடிவுக்கு தடை கோரும் வழக்கு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தக்கோரிய வழக்கு தொடர்பாக ஆளுனரின் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுனர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், அவசர சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் பிரசன்னா வாதிடுகையில், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் 1,56,249 பேரில் 6 பேர் மட்டுமே நீ்ட்தேர்வில் வெற்றிப்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு அமல் செய்யப்படுவதற்கு முன்பு ஒரு சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், நீட் தேர்வு அமலானதற்கு பிறகு அந்த எண்ணிக்கை 0.1 சதவீதமாக குறைந்துவிட்டது. 2018-19ல் 5, 2019- 2020ல் 6 என கடந்த இரு கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைத்துள்ளது என்றார்.

பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் பல விஷயங்களில் முரண்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் ஒன்றாக உள்ளனர். நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவாய்ப்புள்ளது. இதனால் இதில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மனு தொடர்பாக தமிழக ஆளுனரின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதிமன்ற உத்தரவை ஆளுனரின் செயலருக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x