Published : 14 Oct 2020 11:03 AM
Last Updated : 14 Oct 2020 11:03 AM

பஞ்சாயத்துத் தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம்; இன்னும் எத்தனை முறை இங்கே ஜனநாயகமும் சமூகநீதியும் குழித்தோண்டி புதைக்கப்படும்? - கமல் கேள்வி

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன எனவும், அதைக் கண்டும் காணாதிருப்பதும் கள்ள மெளனம் சாதிப்பதும் கண்டிக்கத்தக்கது எனவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:

"நெஞ்சு பொறுக்குதில்லையே!

தெற்கு திட்டை பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரியை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வைத்து தீண்டாமை கொடுமை செய்த புகைப்படத்தைப் பார்க்கையில் நெஞ்சு கொதிக்கிறது.

ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம் சுதந்திர தின கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் சரிதாவுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகிறது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரச பிரதிநிதிகள்.

இவர்களைப் பணி செய்ய விடாமல் தடுப்பதற்கும், துன்புறுத்துவதற்குமான தைரியம் எங்கிருந்து வருகிறது? இது பெரியார் மண் என பெருமை பொங்கப் பேசுகிறோமே இதுவா பெரியார் பேசிய சமத்துவம்? சாதிகள் இல்லையடி பாப்பா என ஜதியோடு பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறோமே நிதர்சனத்தில் ஏன் இத்தனை காட்டுமிராண்டித்தனம் நீடிக்கிறது?

ஒடுக்கப்பட்டவர்கள் எந்த வழியாக முன்வரிசைக்கு வந்தாலும் சாதி வந்து வழிமறிக்கிறதே? ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், பதவி கிடைத்தும், அதிகாரம் இருந்தும், சாதி என்ற ஒற்றை வார்த்தையில் ஒடுக்கி வைக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 29 குடும்பங்கள், சட்டம் கொடுக்கும் பாதுகாப்பை நாடியதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல். இந்த நிலை தொடர்வது ஏன்?

'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு' தலைவராக இருப்பது தமிழக முதல்வர். இந்த கமிட்டி ஆண்டுக்கு இரு முறை கூட வேண்டும் என்பது 1989 ஆண்டிலிருந்தே அமலில் இருக்கும் நடைமுறை.

ஆனால், இங்கு கவலைக்குறிய விசயம் என்னவெனில் கடந்த ஏழாண்டுகளாக இந்தக் கமிட்டி கூட்டம் நடக்கவே இல்லை. அரசாங்கமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட உண்மை இது.

சட்டமும் ஜனநாயகமும் மக்களுக்குக் கொடுத்திருக்கிற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமைகளுள் ஒன்று. அரசில் இருப்பவர்களும் அரசைக் கைப்பற்ற நினைப்பவர்களுமே கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமூகநீதி நாங்கள் போட்ட பிச்சை என்பதும், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று கேட்பதும், பழங்குடிச் சிறுவனிடம் ஷூவை மாட்டு என ஏவுவதும் நாம் நாகரீக சமூகம்தானா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி எனும் பழஞ்சொல் நம் நினைவில் எழுகிறது. மக்களின் பிரதிநிதிகளை இப்படி இழிவாக நடத்துவதற்கானத் துணிச்சல் எங்கிருந்து வருகிறது? இந்தத் தீண்டாமை வெறியர்களின் புகலிடம் எது? இம்மாதிரி பதற வைக்கும் செய்திகள் வரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் கடைப்பிடிக்கும் கள்ள மெளனத்திற்கு என்ன அர்த்தம்? எவர் மனதைக் குளிரவைக்க இந்த பாராமுகம்? வாக்கரசியலுக்காக இன்னும் எத்தனை முறை இங்கே ஜனநாயகமும் சமூகநீதியும் குழித்தோண்டி புதைக்கப்படும்?

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அதைக் கண்டும் காணாதிருப்பதும் கள்ள மெளனம் சாதிப்பதும் கண்டிக்கத்தக்கது.

சட்டம் சனங்களுக்குக் கொடுத்திருக்கும் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. உங்கள் அதிகார வெறி அரசியலில் சாதிய கணக்குகள் மேலோங்கி நிற்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள் அனைவரும் சமம் எனும் சமத்துவக் கனவு நிறைவேற மக்களின் உரிமைகளை மையமாகக் கொண்ட அரசே அமைய வேண்டும். மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும்".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x