

ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரிப்பால் சில்லறை வியாபாரம் அதிகரித்துள்ளது.
ஈரோடு கனி ஜவுளிச்சந்தையில் தினச்சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.25 லட்சம் வரையிலும், பண்டிகைக் காலங்களில் ரூ.ஒரு கோடி வரையிலும் ஜவுளிவகைகள் விற்பனையாகும். வாரச்சந்தையைப் பொறுத்தவரை வாரம் ரூ.2 கோடிக்கும், தீபாவளி, பொங்கல், ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் வியாபாரம் நடைபெறும். இதேபோல் அசோகபுரம் மற்றும் சென்ட்ரல் திரையரங்கு அருகேயும் ஜவுளிச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் ஜவுளிச்சந்தைகள் மூடப்பட்டன. அதன் பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது. பேருந்துகள் இயக்கம் மற்றும் பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.
திங்கள் கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை நடக்கும் கனிஜவுளிச்சந்தையின் வாரச்சந்தையில் ஜவுளி சில்லறை விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜவுளிச்சந்தைக்கு வெளி மாவட்ட சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கான கொள்முதலை அவர்கள் தொடங்கியுள்ளதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இருப்பினும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான புதிய டிசைன்களை வாங்குவதில் சில்லறை வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றனர்.