

மதுரையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாற்றுத்திறன் வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 90 பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு அலுவலக உதவியாளர் வேலை வழங்கியதற்கு உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை துவரிமானைச் சேர்ந்த மதுரேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்கள் அதிகளவில் பதக்கம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கிரிக்கெட் உட்பட பிற விளை யாட்டுகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் மாற்றுத்திறனாளி வீரர்க ளுக்கு அரசு வேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப் படுவதில்லை. மாற்றுத்திறனாளி வீரர்களை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக நடத்துவதில்லை.
எனவே, தமிழகத்தில் விளை யாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், மனுதாரர் பல்வேறு விளையாட்டுப் போட் டிகளில் பங்கேற்று 90-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ஆனால், மனுதாரருக்கு போதிய கல்வித் தகுதியில்லை எனக் கூறி அலுவலக உதவியாளர் பணியை அரசு வழங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு படித்து விட்டு, கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நிய மனம் செய்வீர்களா?
மாற்றுத்திறனாளி வீரர்களை உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன. தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வீரர்கள் கொண்டாடப்படுவதில்லை. தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார்களுக்கு அடுத்து கிரிக்கெட் ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு உள்ளது.
தெலுங்கானா, ஹரியானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அனைத்து உதவிக ளையும் வழங்கி, அம்மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. எந்த விளையாட்டு என பார்க்கக்கூடாது. மாற்றுத்திறனாளி ஒருவர் விளையாட்டில் சாதித்திருப்பதுதான் முக்கியம்.
தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் ஏழை, எளிய வீரர்கள் சாதிக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு எவ்வளவு நிதியுதவி வழங்குகிறது. என் னென்ன வசதிகளை செய்து கொடுத்துள்ளது? மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என் னென்ன சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.