

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கிருபானந்தன் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தன்(19) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கிருபானந்தனை விடுதலை செய்து செப்.29-ல் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிறுமி கொலைக்கு நியாயம் கோரி தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் மாநில அளவில் சலூன் கடைகள் அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யக் கோரி எம்.பி.க்கள் ஜோதிமணி, வேலுச்சாமி, அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் சிறுமியின் குடும்பத்தினருடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி மேல்முறையீடு செய்யக் கோரி அரசுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பினார்.இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வட மதுரை காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில், கிருபானந்தன் குற்றம் செய்ததை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் உள்ளன. இருப்பினும் அவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே கீழமை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. போலீஸார் சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார். பின்னர் மேல்முறையீடு தொடர்பாக கிருபானந்தன் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.