Published : 14 Oct 2020 07:32 AM
Last Updated : 14 Oct 2020 07:32 AM

சிட்லப்பாக்கம் ஏரியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள்: வனம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு

சிட்லப்பாக்கம் ஏரியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தாம்பரம் வட்டத்தில் உள்ளசிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், மண் திட்டுகளால் குறைந்துள்ள நீரின் கொள்ளளவை அதிகரித்தல், ஏரிக்கரையை பலப்படுத்துதல், உபரி நீர் வீணாவதை தவிர்த்தல், உபரிநீரை தடுக்கும் வகையில் சுவர் எழுப்புவது, வெள்ளநீரை வடிகால்கள் மூலமாக திருப்புதல், கழிவுநீரை தடுப்பாண்களை ஏற்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்புதல் போன்ற பணிகள் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய நிதியின் மூலம் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அதேபோல் சிட்லப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை செம்பாக்கம் ஏரியில் கலக்கும் வகையில், பாதாள மூடுகால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளான உதவி வன பாதுகாவலர் டி.ஈஸ்வரன், எஸ்.கார்த்திகேயன், ஏ.ரவிக்குமார், நல்லமுத்து பிள்ளை ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது பணி நடைபெறும்விதம் குறித்து பொதுப்பணித் துறையினர் விளக்கினர். ஆய்வின்போது நீர்வள மேலாண்மை திட்டச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிசெயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் குஜராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x