Published : 14 Oct 2020 07:30 AM
Last Updated : 14 Oct 2020 07:30 AM

சென்னை மாநகராட்சியில் 5-ல் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை மாநகராட்சியில் ஐந்தில்ஒரு பங்கு அதாவது 21 சதவீதம்பேருக்கு நோய் எதிர்ப்பு சக்திஇருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரகஉள்ளாட்சி அமைப்புகளில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை மாநகராட்சியில் கடந்த 11-ம் தேதிவரை 58ஆயிரத்து 493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மேலும் மாலை 3 முதல் 5 மணி வரை மற்றும் 6 முதல் 8 மணிவரை என மண்டலங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் கரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்பு சக்தியை கண்டறிய, 12,460பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 21 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்திஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிதல், சமூகஇடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சீர்மிகு நகரம் திட்டத்தில், சென்னை தவிர 10 மாநகராட்சிகளில் ரூ.9 ஆயிரத்து 688 கோடியே62 லட்சம் மதிப்பில் 450 பணிகள் எடுக்கப்பட்டு, ரூ.593 கோடியே 30லட்சத்தில் 96 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ரூ.7 ஆயிரத்து 200 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 269 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரத்து 500 கோடியே 66 லட்சத்தில்11 உள்ளாட்சிகளில் 14 குடிநீர் மேம்பாட்டு பணிகள் அனுமதிக்கப்பட்டு, தஞ்சாவூர் மாநகராட்சி, ஆம்பூர்நகராட்சியில் பணிகள் முடிந்துள்ளன. மேலும், ரூ.3 ஆயிரத்து 856 கோடியே 36 லட்சம் மதிப்பில் 10உள்ளாட்சி அமைப்பில் 13 பாதாளசாக்கடை பணிகள் அனுமதிக்கப்பட்டு, பல்லாவரம் நகராட்சியில் முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர்சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x