Published : 14 Oct 2020 07:20 AM
Last Updated : 14 Oct 2020 07:20 AM

கண்டலேறு அணையில் 53.60 டிஎம்சி நீர்இருப்பு: சென்னைக்கு 5 மாதங்கள் கிருஷ்ணா நீர் கிடைக்கும்

சென்னை

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் 53.60 டிஎம்சி நீர் இருப்புஉள்ளதால், வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கும் என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு கங்கை திட்டத்தின்படி, கிருஷ்ணா நதிநீர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு வந்து, அங்கிருந்து கண்டலேறு அணைக்கு வந்து சேரும். பின்னர் கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர், சென்னைக் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியை வந்தடையும்.

மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி 1996-ம் ஆண்டு முதல் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு தாராளமாக...

கண்டலேறு அணையில் 9 டிஎம்சிக்கு குறையாமல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னை குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும். பல ஆண்டுகள் 9 டிஎம்சிக்கும் குறைவாக தண்ணீர் இருந்ததால், பெரிய மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி கிருஷ்ணா நதிநீர் வாய்க்காலில் விடப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கண்டலேறு அணையில் கணிசமான அளவு நீர் இருப்பு இருப்பதால் சென்னைக்கு இந்த ஆண்டு தாராளமாக தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறும்போது, “கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68.05 டிஎம்சி. கடந்த 2010-ம் ஆண்டு 50.65 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (அக்.12-ம் தேதி காலை 9 மணி நிலவரப்படி) 53.60 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையில் கணிசமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் விரைவில் திறந்துவிடப்படும்.

அணையில் இருந்து பாசனத்துக்காக நவம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்படும். அப்போது முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்புள்ளது. இதை ஆந்திர மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x