Published : 14 Oct 2020 07:11 AM
Last Updated : 14 Oct 2020 07:11 AM

தமிழகத்தில் 11 ஆர்டிஓ.களில் கணினி உதவியுடன் ஓட்டுநர் பயிற்சி பெற விரைவில் ‘சிமுலேட்டர்’ மையங்கள்: சாலை விபத்துகள் குறையும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் நம்பிக்கை

வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தரப்படுத்துவதற்காக தமிழகத்தில் முதல்கட்டமாக 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி உதவியுடன் ஓட்டுநர் பயிற்சி பெற ‘சிமுலேட்டர்’ மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும் என தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சாலை விபத்துகள், இறப்புகளைக் குறைக்க தமிழக அரசு, போக்குவரத்து துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்
ளிட்ட பல்வேறு துறைகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால், சாலை விபத்துகளும், இறப்புகளும் சிறிய அளவில் குறைந்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 57 ஆயிரத்து 728 சாலை விபத்துகளில் மொத்தம் 10 ஆயிரத்து 525 பேர் இறந்துள்ளனர். சாலை விதிகளை மீறுவோர் மீதுகடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சாலை பாதுகாப்பு தொடர்பாக,தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வு
களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதனால், இந்த ஆண்டில் மேலும் 25 சதவீதத்துக்கும் மேல் சாலை விபத்து, இறப்பு விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர்களின் கவனக்குறைவு

நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ.கள்) கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைப்பது, முழுமையான பயிற்சி பெற்ற பிறகே ஓட்டுநர் உரிமம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல், மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் மூலம் பல்வேறு கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) கணினி உதவியுடன் பயிற்சி பெற ‘சிமுலேட்டர் சென்டர்ஸ்’ நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதாக ஓட்டுநர் உரிமம் பெற வருவோருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் ஒட்டுமொத்த சாலை விபத்துகளுக்கு 80 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, புதியதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது, போலி ஓட்டுநர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓட்டுநர் உரிமம் பெற வருவோருக்கு கட்டாயம் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல், ஆர்டிஓ.களில் கணினி உதவியுடன் ஓட்டுநர் பயிற்சி அளிக்கவுள்ளோம்.

இதற்காக, தமிழகத்தில் முதல்கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மீனம்பாக்கம்,தாம்பரம், சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய 11ஆர்டிஓ.களில் ‘சிமுலேட்டர்’ மையங்கள் அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையங்களில் இலகுரக, கனரக ஓட்டுநர் உரிமத்துக்கான பயிற்சிகளை தனித்தனியாக மேற்கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்படும்.

6 மாதங்களில் அமைக்க திட்டம்

ஒரு வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும்போது, கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்,எதிர்கொள்ள வேண்டிய சவால்
களை அறிந்து கொண்டு, கியர்இயக்குவது, வேகத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்துகணினி திரைகள் மூலம் எளிமையாக பயிற்சிகளை எடுத்துக் கொள்ள முடியும்.

அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தரப்படுத்துவதோடு, சாலை விபத்துகளைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x