Published : 14 Oct 2020 07:07 AM
Last Updated : 14 Oct 2020 07:07 AM

பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இளம்பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் இறந்தாலோ அல்லது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானாலோ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வேண்டியதும் அவசியமாகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நடந்த மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி.க்கள் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க புதிய நிதியை உருவாக்குவது குறித்து அறிவித்தார். அதன்படி, புதிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான இழப்பீடு குறித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புசட்டத்தின்கீழ், ‘தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதி’ உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு முதல்கட்டமாக ரூ.14 கோடியே 96 லட்சத்தை ஒதுக்கி, அதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு சமூக பாதுகாப்பு ஆணையர் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம்வரை இழப்பீடாக நிர்ணயித்துள்ளது. மேலும், ‘தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதி’க்கு ரூ.2 கோடியை முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது.

பாலியல் வன்முறையால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல்அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். மிக கடுமையான வல்லுறவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அளிக்கப்படும்.

பாலியல் தாக்குதல் நேர்ந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும், கடும் பாலியல் தாக்குதலுக்கு ஆளானால் ரூ.2 லட்சம் முதல் ரூ.4லட்சம் வரையும், மனம் அல்லது உடல்ரீதியாக கொடுங்காயம் ஏற்பட்டு மறுவாழ்வு தேவைப்படுவோருக்கு ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரையும், ஆபாசப்படம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரையும் இழப்பீடு வழங் கப்படும். பாலியல் வன்முறையில் உயிரிழந்தால், அந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

உடல் உறுப்பு இழப்பின் மூலம் 80 சதவீதம் ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும், 40 முதல் 80 சதவீதத்துக்கும் குறைவான ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம்முதல் ரூ.4 லட்சம் வரையும், 20 சதவீதம் முதல் 40 சதவீதத்துக்கு குறைவான ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம்முதல் ரூ.3 லட்சம் வரையும், பாதிப்பு20 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் இழப்பீடு வழங்கப்படும்.

பாலியல் வன்முறையால் கர்ப்பம் தரித்தால், ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும், கரு உருவாகி, கலைக்கப்பட்டு, மீண்டும் கர்ப்பம் தரிக்கும் தகுதியை இழந்தால் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை இழப்
பீடு அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x