Published : 13 Oct 2020 08:13 PM
Last Updated : 13 Oct 2020 08:13 PM

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை அவமதித்தது  திமுக துணைத்தலைவர் என்பதை மறைத்து ஸ்டாலின் அறிக்கை விடுவதா?- அமைச்சர் பெஞ்சமின் கேள்வி

சென்னை

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமைக் கொடுமைக்குக் காரணமான பின்னணியை மறைத்துவிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அமைச்சர் பெஞ்சமின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு திமுகவில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

மேற்படி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமைக் கொடுமைக்குக் காரணமான திமுக பின்னணியை மறைத்ததோடு, சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டவரைக் காப்பாற்றுவதற்கும் பெரும் முயற்சி செய்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தின் இழி செயல் என்று அறிக்கை வெளியிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த திமுக தலைவர் முயன்றிருப்பது பித்தலாட்டத்தின் உச்சமாகும்.

ஏற்கெனவே ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று தயாநிதி மாறன் பட்டியலினத்து மக்களை இழிவு செய்தபோது, அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை இழி வசனம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைக் கண்டிக்கவில்லை.

விளம்பரத்திற்காக அவ்வப்பொழுது பொய் வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கும் திமுகவின் முக்கிய நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகளைத் தரக்குறைவாகப் பேசியதை கண்டிக்காமலும் கடந்துபோன திமுக. தலைவர் இன்று சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமைச் செயலுக்கு யார் காரணம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலே அதிமுக ஆட்சி மீது பழிபோட முயன்றிருப்பது அவரது அறியாமையையும், அரசியல் அரிப்பையுமே காட்டுகிறது.

அதிமுக என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும். இந்த இயக்கம் பெரியார் விளைந்த ஈரோட்டுச் சீமையில் செங்குந்த முதலியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் நிறைந்த பகுதியில் மிகமிக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை அமைச்சராக்கி சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கமாகும்.

அது மட்டுமல்ல, நீர்த்தலமான திருவானைக்காவலும், பூலோகச் சொர்க்கமான திருவரங்கமும் இடம் பெற்ற திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற பொதுத் தொகுதியில் தன் பெயரிலேயே தலித் என்கிற அடைமொழியை சுமந்திருந்த மறைந்த தலித் எழில்மலையைப் போட்டியிட வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கி சமதர்மத்தை இந்த நாட்டுக்கே முன்மொழிந்த இயக்கமும் அதிமுக தான்.

அதுபோலவே, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு உத்வேகம் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அனைத்திந்திய அதிமுக என்றால், மாட்சிமை பொருந்திய சட்டப்பேரவையின் நடுவரான சபாநாயகரை இருக்கையில் இருந்து கீழே தள்ளிவிட்டு ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் தொடங்கி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து, இன்று எளிமை சாமானியர் எடப்பாடியார் வரை பட்டியலினத்து மக்களை பரிவோடும் பாசத்தோடும் முன் கொண்டு செல்வதிலும், அவர்களுக்கான சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட உரிமைகளை நிறைவாக வழங்கி தாழ்த்தப்பட்ட சமூகம் தன் நிலையில் உயர்ந்திட எந்நாளும் உழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வெள்ளந்தி மக்களும் உளமாற அறிவர்.

மேலும், பொது வாழ்வில் பெண் இனத்திற்கு 50 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை வழங்கி, உள்ளாட்சிகள் தொடங்கி உள்துறை செயலாளர் வரை பெண்களுக்கு உயரிய மாடங்களை அமைத்துக் கொடுத்ததும் அதிமுகதான்.

தமிழகத்தின் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு அரசாணைகளுக்குட்பட்டு இட ஒதுக்கீடு மற்றும் பாலின ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயக் கடமைகளை, முக்கியமாக ஊரக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வதிகளை ஏற்படுத்துவதில் தங்களது சீரிய கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு கட்டாயக் கடமைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, கூட்டப்பட்ட கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சியில் நடைபெற்றது போன்றதொரு கசப்பான சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாது இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சியில் தவறிழைத்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சியை முன்னேற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், இது போன்றதொரு சாதி, மத வேறுபாடுகளுக்கு அகப்படாமல் ஒன்றிணைந்து செயல்படவும், மேலும், மற்ற ஊராட்சி அமைப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல், அவரவர்க்கு உரிய பணிகளை அரசு விதிகளுக்குட்பட்டு செய்யவும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படும்.

மேலும், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் தொடர்புடைய அரசு விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு துறை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு முறையாக ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துதல், கண்காணித்தல், தவறு இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதிமுகவும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, ஒரு போதும் தீண்டாமை என்கிற இழி செயல் நிகழ அனுமதித்தது கிடையாது. அதே வேளையில், பிரியாணி கடையில் குத்துச் சண்டை போடுவது, பியூட்டி பார்லரிலும், தேங்காய் கடையிலும் பெண்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்துவது, சிக்கனில் எலும்பு இல்லை என்று உணவக சிப்பந்தியை அடித்து உதைப்பது என்றெல்லாம் அநாகரிகத்தின் உச்சமாகவும், சாதிய துவேசங்களின் மையமாகவும் திமுகதான் திகழ்கிறது.

மேலும், ஒரு நிகழ்வாக தினசரி நாளிதழ் ஒன்றில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றிய திமுக செயலாளர் ஸ்டாலினுடன் காணொலிக் காட்சியில் உரையாடியபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமாரைத் தரையில் அமர்த்திய புகைப்படம் வெளிவந்து திமுகவில் நிகழும் சாதிய துவேசம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, இதையெல்லாம் மறைப்பதற்கு சமூக நீதிக் காவலர் போல ஸ்டாலின் அறிக்கை விடுவது வெட்கக் கேடாகும். நாகரிக உலகத்தில், இன்னும் காட்டு மிராண்டிகளாக நடந்துகொள்ளும் தன் கட்சியில் உள்ள தவறான பேர்வழிகளுக்கு பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளை ஸ்டாலின் காணொலிக் காட்சிகள் மூலமாவது போதிப்பது உத்தமம்.

அப்படி போதிப்பதற்கு முன்பு, அதனை ஸ்டாலின் தானும் படித்து அறிந்து கொள்வது உத்தமத்திலும் உத்தமம் ஆகும்''.

இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x