Published : 13 Oct 2020 07:38 PM
Last Updated : 13 Oct 2020 07:38 PM

நீதிபதி ரவிசந்திரபாபு ஓய்வு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக குறைந்தது

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011-ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரவிசந்திரபாபு, இன்றுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலியில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ரவிச்சந்திரபாபு குறித்த சிறப்புரையை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாசித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, கடந்த 9 ஆண்டுகளாக உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்ததுடன், தற்போது இளம் வழக்கறிஞர்கள் பலர் நல்ல முறையில் நீதிமன்றத்தில் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்குகள் தொடர்பாக நிறைய படிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தன்னுடைய பணி காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். நீதிபதி ரவிச்சந்திரபாபு பணி ஓய்வு பெறுவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக குறைந்து, காலியிடங்கள் 22 ஆக அதிகரித்துள்ளது.


நீதிபதி ரவிச்சந்திரபாபு குறித்த குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 1958-ல் பிறந்தவர்

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியிடம் ஜூனியராக பணியாற்றியவர். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் வழக்கறிஞராக பணியாற்றியவர். 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நீதிபதியாக பதவியேற்றார்.

விசாரித்த வழக்குகள் :

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக 34 ஆண்டுகள் பணியாற்றிய பெண்ணுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தீர்ப்பு

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதிநீக்க வழக்கு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதிநீக்க கோரிய வழக்கு, பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் மீதான உரிமைக்குழு நோட்டீஸ் எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை 2017-ல் விசாரித்தார். இரண்டாவது முறையாக குட்கா விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது 2017-லேயே ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டுவிட்டதால் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக கூறி அதிலிருந்து விலகினார்.

கடந்த ஆண்டு விழா ஒன்றில் பேசும் போது வழக்கறிஞர்கள் எப்படி பணியாற்ற வேண்டும், நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கவேண்டும் என்றார் அவரது பேச்சு வருமாறு:

ஒரு வழக்கறிஞா் வாதிடும்போது முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் குறுக்கு வழிகளில் அணுகக் கூடாது. நீதிமன்றங்களில் வழக்குகளை திசை மாற்றுவதையும், தேவையில்லாமல் வாதிடுவதையும் தவிா்க்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபடும் போது, பொதுமக்களை பாதிக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதனால் வழக்கறிஞா்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும். நீதிமன்றங்கள் மன்றங்கள் மட்டும் இணைந்தால் போதாது. நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் ஆகியோா் இணைந்து செயல்படவும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x