

மதுரை மதிச்சியம் பகுதியில் 12 திருநங்கைகள் சேர்த்து பசு மாடுகள் வளர்த்து சொந்தமாக பால் வியபாரம் செய்கின்றனர்.
குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட திருநங்கைகள் இந்த சமூகத்தாலும் ஒதுக்கப்படும் விழிப்புநிலை மக்களாக வசிக்கின்றனர். சாதாரண மக்களுக்கே நகர்புறங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க அவர்கள் சாதி, மதம், பணிபுரியும் இடம் உள்ளிட்ட கவுரவம் பார்க்கும் இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கான வாழ்வாதாரம் நிரந்தர கேள்விகுறியாகவே நீடிக்கிறது.
அவர்களின் பாலின சிக்கல் காரணமாக தனியார் நிறுவனங்களும் அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்வதில்லை. அதனால், அவர்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக சாலையோர கடைகளில் யாகசம் கேட்கும் பரிதாப சூழலில் வசிக்கிறார்கள்.
கரோனா ஊரடங்கால் நிறுவனங்கள், கடைகள் எதுவும் 5 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாததால் திருநங்கைகள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப்போனது. அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டநிலையில் மதுரை மதிச்சியத்தில் 12 திருநங்கைகள் சேர்த்து, அவர்கள் வைத்திருந்த சேமிப்பு பணத்தில் 2 பசு மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்கின்றனர்.
மதுரை மதிச்சியம் பகுதியில் நிறைய கும்மி பாட்டுக் கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள் உள்ளனர். இவர்களுடன் இந்த இந்த திருநங்கைகளும் சேர்ந்து கும்மிப்பாட்டு பாடவும், கரகாட்டம் ஆடவும் சென்று வந்துள்ளனர்.
திருவிழா இல்லாத காலங்களில் கடைகளில் யாகசம் பெற்று வந்தனர். கரோனா ஊரடங்கால் திருவிழாக்களும் இல்லாமல் யாகசம் பெறவும் வழியில்லாமல் திருநங்கைகள் அன்றாட சாப்பாட்டிற்கே மிகுந்த சிரமப்பட்டுள்ளனர்.
அதனால், இந்த 12 திருநங்கைகளும் ஒன்று சேர்ந்து 2 பசு மாடுகளை வாங்கி கடந்த 2 மாதமாக வெற்றிகரமாக சொந்தமாக பால் வியாபாரம் செய்வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘எந்த அனுபவமும் இல்லாமல்தான் பசு மாடுகளை வாங்கினோம். காலையில் 2 பசு மாடுகளையும் வைகை ஆற்றங்கரையோரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வோம். மதியம் தண்ணீர் காட்டுவோம். மாலையில் புல், வைக்கோல் வாங்கிப்போடுகிறோம்.
2 பசு மாட்டிலும் தினமும் காலையும், மாலையும் 12 லிட்டர் பால் கிடைக்கிறது. பண்ணைக்காரர்கள் நேரில் வந்து பால் கறந்து எடுத்து சென்றுவிடுகின்றனர். செலவு எல்லாம் போக ரூ.500 கிடைக்கிறது.
இந்தத் தொழில் கவுரவமாகவும், அன்றாடம் நிரந்தரமாக வருமானமும் கிடைப்பதால் நிரந்தரமாகவே இனி இந்தத் தொழிலை செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது.
ஆனால், இந்த வருமானம் 12 பேருக்கு போதுமானதாக இல்லை. கூடுதலாக இன்னும் 2 பசு மாடுகள் வாங்கினால் நாங்கள் யாரிடமும் யாகசம் பெறாமல் இந்தத் தொழிலை செய்து பிழைத்துக் கொள்வோம்.
எங்களை போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடியும், ’’ என்றார்.
மதுரை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, வங்கிகள் ஆகியவை இணைந்து அவர்கள் சுய தொழில் செய்யவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியவும் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.