

‘‘ஒலிம்பிக் போட்டியைப் போல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி மாறுறார் குஷ்பு,’’ என கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சித்துள்ளார்.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஷ்பு ஒலிம்பிக் போட்டியைப் போல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி தாவுகிறார். அவர் கொள்கை ரீதியாக அரசியல் செய்பவர் போல் தோன்றவில்லை. காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் 180 டிகிரி கொள்கை ரீதியாக வித்தியாசம் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவினரை விமர்சித்துவிட்டு தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளார். அவரை எவ்வாறு ஏற்றுக் கொண்டனர் எனத் தெரியவில்லை.
குஷ்பு ‘காங்கிரஸ் கட்சியினரை மனநலம் பாதித்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்,’ அவர் காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு சென்றதால் இரண்டு கட்சிகளுடைய ஐக்யூ சராசரியாக உயர்ந்துள்ளது.
ஒருவரை கட்சியில் இருக்கும்போது தலையில் வைத்து கொண்டாடுவது, இல்லாதபோது விமர்சிப்பது என்பது என்னுடைய எண்ணம் கிடையாது. நீட் தேர்வை முதலில் ஆதரித்தேன். ஆனால் அது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் தற்சமயம் அந்த தேர்வு தேவையில்லை என எதிர்க்கிறேன்.
இதற்கு தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. வருகிற சட்டபேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும், என்று தெரிவித்தார்.