

ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முல்லைராஜ் மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்கக் கோரியும், ராணுவ வீரர் குடும்பத்துக்கு அரசின் சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவரது மகன் முல்லைராஜ் (28). ராணுவ வீரரான முன்லைராஜ், காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் நௌகாம் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முல்லைராஜின் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டவர், முல்லைராஜ் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால் அழகாத்தாள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ராணுவ அதிகாரிகளிடம் இருந்து முறையான தகவல் ஏதும் வராததால் முல்லைராஜின் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
இதைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் அழகாத்தாள் மற்றும் ஆயாள்பட்டி கிராம மக்கள் முறையிட்டனர். இந்நிலையில், முல்லைராஜின் உடலை ராணுவத்தினர் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திருநெல்வேலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முல்லைராஜ் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக உண்மை நிலவரத்தை ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும், உடல் எப்போது கொண்டுவரப்டும் என்றுகூட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்கக் கோரியும், ராணுவ வீரர் குடும்பத்துக்கு அரசின் சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், கோட்டாட்சியர் முருகசெல்லி, வட்டாட்சியர் திருமலைச்செல்வி உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் சென்னை ரெஜிமெண்ட் சுபேதார் சக்திவேல், என்சிசி இளநிலை அதிகாரி ராஜீவ் உள்ளிட்ட ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் என உறுதியளித்தனர். மேலும், முல்லைராஜ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து சீரடைந்தது.
இதையடுத்து, ராணுவ வீரர் முல்லைராஜின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அவருக்குச் சொந்தமான இடத்தில் தகனம் செய்யப்பட்டது.