

வாணியம்பாடி உழவர் சந்தையில் இடப்பிரச்சினை காரணமாக விவசாயிகள் - வியாபாரிகள் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில், விவசாயி ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் 'உழவர்சந்தை' இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாணியம்பாடி, கொடையாஞ்சி, உதயேந்திரம், வெள்ளக்குட்டை, ஆலங்காயம், மரிமானிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் விளையும் விவசாய விளைபொருட்களை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
அதேபோல, உழவர் சந்தைக்கு வெளியே, அதாவது நுழைவு வாயில் அருகே நடைபாதை வியாபாரிகளும் கடைகளை விரித்துக் காய்கறி, கீரை, வெற்றிலை, பழ வியாபாரம் நடத்தி வருகின்றனர். உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை நடைபாதை வியாபாரிகள் வழியிலேயே மடக்கி வியாபாரம் செய்து வருவதால், உழவர் சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த 200 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன் (47) என்பவர் இன்று (அக்.13) அதிகாலை 3.45 மணிக்கு விளைபொருட்களுடன் உழவர் சந்தைக்கு வந்தார்.
தன்னுடைய இருசக்கர வாகனத்தை உழவர் சந்தை நுழைவு வாயில் அருகே நிறுத்திவிட்டு விளைபொருட்களுடன் தமிழ்ச்செல்வன் உள்ளே சென்றார். இருசக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் வாணியம்பாடி கொத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நடைபாதை வெற்றிலை வியாபாரியான மோனிஷ்குமார் (34) என்பவர் கடை வைப்பது வழக்கம்.
அதன்படி மோனிஷ்குமார் இன்று அதிகாலை 4.15 மணிக்கு வந்தபோது தான் கடை வைக்கும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைக் கீழே தள்ளிவிட்டு அங்கு வெற்றிலைக் கடையை வைத்தார். இதையறிந்த விவசாயி தமிழ்ச்செல்வன் வெளியே வந்து நடைபாதை வியாபாரி மோனிஷ்குமாரிடம் தகராறு செய்தார்.
அதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது, நடைபாதை வியாபாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து விவசாயி தமிழ்ச்செல்வனைச் சரமாரியாகத் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. உடனே அவர் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவசாயி தாக்கப்பட்டதைக் கண்டித்த விவசாயிகள் வியாபாரத்தைப் புறக்கணித்து உழவர் சந்தை முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், நடைபாதை வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் உழவர் சந்தை அருகே வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் அதிகரித்தது. இதையடுத்து, வாணியம்பாடி நகர காவல் துறையினர், வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, நடைபாதை வியாபாரிகள், "தங்களுக்கும் உழவர் சந்தையில் கடைகளை ஒதுக்கித் தர வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன" எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினரிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
அதேபோல, விவசாயி தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடத்திய மோனிஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற விவசாயிகளும் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து விவசாயி தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.