Published : 13 Oct 2020 04:36 PM
Last Updated : 13 Oct 2020 04:36 PM

தபால் தலைகள் சேகரிப்பில் தடம் பதிக்கும் குமரி இளைஞர்

அக்.13- இன்று தபால் தலைகள் தினம்

'பொழுதுபோக்குகளின் ராஜா' என்று தபால் தலை சேகரிப்பைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சுவாரசியம் தபால் தலை சேகரிப்பில் இருக்கிறது. குழந்தைகள் தபால் தலை சேகரிப்பில் ஈடுபடுவது அவர்களின் அறிவுத் திறனை விசாலமாக்கும். அந்த வகையில் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி அரிய வகை தபால் தலைகள், நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேமிப்பைக் கொண்டு பள்ளிகளில் கண்காட்சி வைத்து விழிப்புணர்வும் ஊட்டி வருகிறார்.

இதுகுறித்துக் குமாரசாமி 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தபால் தலைகளைச் சேகரித்துள்ளேன். சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்த நாளையே உலக அஞ்சல் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்திய அஞ்சல் துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. அதில் இன்று (13-ம் தேதி) தபால் தலைகள் தினமாகும்.

எனக்குச் சிறுவயதில் இருந்தே தபால் தலைகள் சேகரிப்பில் அபரிமிதமாக ஆர்வம் இருந்தது. இந்தியா மட்டுமல்லாது ஸ்காட்லாந்து, ரஷ்யா, நேபாளம், மெக்சிகோ, கியூபா, மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகளின் தபால் தலைகளைச் சேகரித்துள்ளேன். இதேபோல் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் இளமைப்பருவம் முதல் முதுமை வரை அவரது வாழ்க்கைப் பயணத்தை உணர்த்தும் பன்னாட்டு அரியவகை அஞ்சல் தலைகளையும் சேகரித்து வைத்துள்ளேன்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களைக் கவுரவிக்கும் வகையில் அந்தந்த அஞ்சலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களில் சிறப்பு முத்திரையில் அந்த ஊரின் தொன்மையைச் சொல்லும் குறியீடு, பட வடிவில் இருக்கும்.

அந்த வகையில் வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் பள்ளிவாசல், மதுரை மீனாட்சியம்மன் கோயில், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, ஆக்ராவில் தாஜ்மஹால், மகாபலிபுரத்தில் கடற்கரைக் கோயில், முட்டத்தில் கலங்கரை விளக்கு என இதுவரை 160 இடங்களின் அஞ்சல் முத்திரையைச் சேகரித்துள்ளேன். இதுபோகப் பறவைகள், விலங்குகள், நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டுப் பணத்தாள், அரியவகை நாணயங்கள் ஆகியவற்றையும் சேகரித்துள்ளேன்.

தபால் தலைகள்

என் வீட்டில் இதற்கென்றே தனி அறை ஒதுக்கியுள்ளேன். பொதுவாக மாணவர்கள் மத்தியில் இந்தத் தபால் தலை சேமிப்பைக் கொண்டு செல்லும்போது இயல்பாகவே அவர்களுக்கு அறிவுத்தேடல் உருவாகும். ஒவ்வொரு தபால் தலையின் பின்னாலும் ஏதோ ஒரு வரலாற்றுத் தருணம் ஒளிந்திருக்கும். மாணவர்களுக்கு அதுகுறித்த தேடல் உருவாகி இயல்பாகவே கல்வியின் மீது நாட்டம் செல்லும்.

குமாரசாமி

என்னுடைய சேமிப்பைப் பள்ளி, கல்லூரிகளுக்கு எடுத்துச் சென்று கண்காட்சி வைத்து அடுத்த தலைமுறையினர் மத்தியிலும் இந்தச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன். கரோனா நேரத்தில் கண்காட்சி நடத்த முடியாதது வருத்தத்தைத் தருகிறது'' என்றார் குமாரசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x