கேரளாவில் ஓணம் பண்டிகையால் கரோனா பரவியது தீபாவளி ‘ஷாப்பிங்’ கவனமாக மேற்கொள்ளுங்கள்: தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்

கேரளாவில் ஓணம் பண்டிகையால் கரோனா பரவியது தீபாவளி ‘ஷாப்பிங்’ கவனமாக மேற்கொள்ளுங்கள்: தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
Updated on
1 min read

கேரளாவில் ஓணம் பண்டிகையால்தான் மீண்டும் கரோனா அதிகளவு பரவியது. அதனால், தீபாவளி பண்டிகை ஷாப்பிங்கை சமூக இடைவெளி விட்டு கவனமாக மேற்கொள்ளுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை விவரங்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின், அவர் டீன் சங்குமணி மற்றும் கரோனா சிகிச்சை மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை,கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கரோனோ பாதிப்பு 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. கரோனோ குறைந்து வரும் நிலையில் மழைக்காலம் துவங்குவதால் கரோனோ மட்டுமல்லாமல் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் தற்போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் ஓணம் பண்டிகையால் மக்கள் அலட்சியமாக இருந்ததாலே அங்கு மீண்டும் கரோனா அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், பொதுமக்கள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால ஷாப்பிங்கை சமூக இடைவெளி விட்டு கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

பண்டிகை மற்றும் மழைக் காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் கரோனோ இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. கரோனோ பாதிப்பு ஏற்பட்டால் தாமாகவே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் கரோனோவிற்கு 80 வகையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்ச்சல் முகாம் குறைக்கப்படவில்லை. கரோனோ பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தற்போது தகரம் வைத்து அடைக்கபடுவதில்லை. கரோனோ பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கரோனோ பாதிப்பு மேலும் குறைவது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. தடுப்பு மருந்து வரும் வகை கவனமாக இருக்க வேண்டும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கரோனோ பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் அமைப்பதற்கான ஜப்பானை சேர்த்த ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. ஒப்புதல் வழங்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெறுகிறது. ஒப்புதல் வாங்கியவுடன் விரைவில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in