Published : 13 Oct 2020 03:03 PM
Last Updated : 13 Oct 2020 03:03 PM

கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தாமதம்: தமிழர் நாகரிகம், தொன்மை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித் திட்டமா?- ராமதாஸ் சந்தேகம்

சென்னை

முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வுகளின் அறிக்கைகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை, தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித் திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும், அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருகட்ட அகழாய்வு அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்தன. மொத்தம் 4 இடங்களில் 47 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட இந்த அகழாய்வில், குழந்தைகளின் எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள் என 2,430 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அகரம் பகுதியில் நடந்த ஆய்வில் 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் வயது உறுதி செய்யப்படும்போது தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது நிரூபிக்கப்படும்.

உலகின் மூத்தக்குடி தமிழ்க்குடிதான் என்று நாம் பெருமிதத்துடன் கூறி வருகிறோம். இலக்கிய ரீதியாக அதற்கான ஆதாரங்கள் இருந்தாலும் கூட, அதை நிரூபிப்பதற்குத் தேவையான தொல்லியல் ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அதுகுறித்த ஏக்கத்திற்கு கீழடி அகழாய்வு முடிவு கட்டும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அங்கு நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு நடத்தப்பட்ட 3 ஆய்வுகளிலும், அதற்குப் பிறகு நடத்தப்பட்ட இரு கட்ட ஆய்வுகளிலும் தமிழர் நாகரிகம் இன்னும் தொன்மையானது என்று நிரூபிக்கப்படும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு. ஆனால், எதிர்பார்ப்பு நீள்கிறதே தவிர நிறைவேறவில்லை.

கீழடியில் மாநில தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு 2018 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. அதன் அறிக்கை 2019 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பார்த்தால் 2019 ஆம் ஆண்டில் நிறைவடைந்த ஐந்தாம் கட்ட அகழாய்வின் முடிவுகள், நடப்பாண்டில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை. கரோனா காரணமாக அகழாய்வின் முடிவுகளை பட்டியலிடும் பணிகள் பாதிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால், 2015 முதல் 2017 வரை மத்திய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகள் 5 ஆண்டுகளாகியும் கூட வெளியிடப்படாததன் மர்மம் தான் இன்னும் விளங்கவில்லை. அவற்றை வெளியிட உயர் நீதிமன்றம் பல முறை கெடு விதித்தாலும் கூட அவற்றை மத்திய தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை. பாமகவும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. அதுமட்டுமின்றி, முதல் 3 கட்ட அகழாய்வுகளை நடத்திய அதிகாரிகளை இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்குப் பணியிட மாற்றம் செய்ததன் மூலம் அறிக்கை தயாரிப்பு தாமதமாவதற்கும் வழிவகுத்தது.

தமிழர் நாகரிகம்தான் உலகின் மூத்த நாகரிகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனாலும், அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது நமது கடமையாகும். அதை நிரூபிக்க கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருட்களும், அவற்றின் வயதும்தான் முக்கிய ஆதாரங்களாக இருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வுகளின் அறிக்கைகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை, தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித் திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கனவு, எதிர்பார்ப்பு, ஆவல், தாகம், தவம் அனைத்தும் ஆகும். அதை உணர்ந்து கீழடியில் நடத்தப்பட்ட முதல் 3 அகழாய்வுகளின் அறிக்கைகளை, இனியும் தாமதிக்காமல், விரைந்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், ஐந்தாம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை உடனடியாகவும், ஆறாம் கட்ட அகழாய்வின் அறிக்கையை அடுத்த சில மாதங்களிலும் வெளியிட தமிழக அரசின் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x