Last Updated : 13 Oct, 2020 02:57 PM

 

Published : 13 Oct 2020 02:57 PM
Last Updated : 13 Oct 2020 02:57 PM

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்போ, மனக்கசப்போ இருப்பதாகத் தெரியவில்லை: எஸ்.கருணாஸ் எம்எல்ஏ கருத்து

10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக மீது மக்களுக்கு வெறுப்போ, மனக்கசப்போ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள தாராநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் செய்தியாளர்களிடம் இன்று (அக். 13) அவர் கூறுகையில், "தாராநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக முக்குலத்தோர் புலிப் படை நிர்வாகிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் முக்குலத்தோர் சமுதாயப் பெண்கள், இளைஞர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கருணாஸ் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "தனிச் சின்னம் இதுவரை வழங்கப்படவில்லை. முக்குலத்தோர் பெருவாரியாக இருந்தாலும் ஆண்டாண்டு காலமாக திராவிடக் கட்சிகளுக்கு அடிபணிந்து கிடக்கும் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று முக்குலத்தோர் கருதுகின்றனர். எனவே, தேர்தல் நிலவரத்தைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கருணாஸ் தெரிவித்தார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, "எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அதிமுக தேர்வு செய்திருப்பது அவர்களது உரிமை. அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதற்கு மனப்பூர்வ வாழ்த்துகள்" என்றார்.

பாஜகவுடன் இணையவுள்ளதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு கருணாஸ் பதில் அளிக்கையில், "நாடாளுமன்ற வளாகத்தில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து தேவர் சமுதாயமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து, வன்னியர் சமூகத்துக்கு வழங்கியுள்ள உள் இடஒதுக்கீட்டை எங்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகளிடத்தில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, எந்தவொரு காலக்கட்டத்திலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது, எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படாது. இந்தக் கட்சி முக்குலத்தோரின் உரிமைகளை மீட்டெடுக்க இறுதி வரை போராடும்" என்றார்.

நடிகர் சங்க விவகாரம் குறித்த கேள்விக்கு, “நீதிமன்ற உத்தரவின்பேரில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி, வெற்றி பெறுவோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் நான் சார்ந்துள்ள பாண்டவர் அணியின் கோரிக்கை" என்று கருணாஸ் தெரிவித்தார்.

விடுதலைக்குப் பிறகு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலா ஏற்பார் என்று பரவும் தகவல் குறித்த கேள்விக்கு, "ஊகத்துக்குப் பதில் கூற முடியாது. உட்கட்சி விவகாரத்தில் கருத்து கூற முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுடன் நீண்ட நாள் உடனிருந்து, அதிமுகவின் அனைத்து நகர்வுகளிலும் முக்கியப் பங்காற்றியவர் சசிகலா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்" என்று கருணாஸ் தெரிவித்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என்ற கேள்விக்கு, "மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மனதில் நீங்காத இடத்தை நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது வெறுப்போ, மனக்கசப்போ மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்குப் பிடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்" என்று கருணாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x