

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலியாக உள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் 3 ஆண்டுகள் பணிமுடித்த கவுரவ அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணியமர்த்த வேண்டும், நிரந்தரப் பணியிடங்களில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் இன்று (அக். 13) தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், கவுரவ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள ஊதியத்தொகை ரூ.3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டு 8 மாதங்கள் கடந்தும் நிறைவேற்றாத புதுச்சேரி அரசுக்குப் போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத் தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாகிரதி மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.