

பள்ளிகளை மூடக்கோரி காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு காரைக்கால் போராளிகள் குழுவினர் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு என தனிக் கல்வி வாரியம் இல்லாத நிலையில், தமிழகக் கல்வி முறையையே புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், கடந்த 8-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கின.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பள்ளிகளை மூட வேண்டும் என புதுச்சேரி அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் புதுச்சேரியில் பள்ளி மாணவருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் கூட பள்ளிகளை மூடுவதற்கு முடிவெடுக்காத புதுச்சேரி அரசைக் கண்டித்தும், பள்ளிகளை மூட வலியுறுத்தியும் காரைக்கால் போராளிகள் குழுவினர், காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இன்று கூடி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராளிகள் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிகளை மூடும் முடிவை அரசு எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.