

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது.
மேலாடையின்றி, கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கருப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்க்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகிகளை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வருகிற 30-ம் தேதி விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதாக சர்க்கரை ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விவசாயிகள், இன்னும் கூடுதலாக 10 முதல் 15 நாட்கள் கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நிலுவைத் தொகையை பின் தேதியிட்ட காசோலையாக வழங்குங்கள் என்று கூறினர்.
இதை சர்க்கரை ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கொசுக்கடி, குளிரையும் பொருட்படுத்தாமல் இரவில் அங்கேயே தங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மேலாடையின்றி பங்கேற்றனர். சிலர் தங்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கோஷமிட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதில் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.