Published : 13 Oct 2020 01:49 PM
Last Updated : 13 Oct 2020 01:49 PM

திமுக கூட்டணியில் கண்ணிவெடி வைப்போரிடம் கூட்டணித் தலைவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்: வீரமணி அறிவுறுத்தல்

சென்னை

திமுக தலைமையில் அமைந்த கூட்டணி - எஃகு போன்ற உறுதியுடைய கொள்கைக் கூட்டணி. ஊகங்களையும், வதந்திகளையும் பரப்பி திமுக கூட்டணியில் ஓட்டை போட, சில கண்ணிவெடிகள் மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த முனைபவர்களிடம் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாகி, எஃகு கோட்டை போன்று நின்று, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போன்று, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கக் கூடிய இயல்பான கொள்கைக் கூட்டணி உறுதியோடும், தெளிவோடும், வலிவோடும், பொலிவோடும் உள்ளது.

அக்கப்போர் அரசியல் நடத்திட சிலர் முன்வந்துள்ளனர்

இதில் ஓட்டை போடவேண்டும், இதுபற்றி இல்லாத, பொல்லாத கற்பனைகளையெல்லாம் உருவாக்கி, சிண்டு முடியும் வேலையில் ஈடுபட சில ஊடகங்கள், சமூகநல ஆர்வலர்கள் என்று அனுமானங்களை, ஊகங்களை நாளும் உற்பத்தி செய்துகொண்டு, அக்கப்போர் அரசியல் நடத்திட சிலர் முன்வந்துள்ளனர்.

பாஜக - அதிமுக கூட்டணி என்பதுபோல், இந்தக் கூட்டணி கொள்கையற்ற கூட்டணி அல்ல. மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. இதன் தலைவர் ஸ்டாலின். இது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதத்தாலோ அல்லது திரைமறைவு பேரங்களாலோ உருவான கூட்டணி அல்ல.

ஜனநாயகத்தையும், சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற

ஒருமித்த கொள்கை - லட்சியம் இவற்றைச் செயல்படுத்த ஆட்சி மாற்றம் என்பது தேவைப்படும் அரசியல் களம் என்பதை உணர்ந்தே கொள்கைபூர்வமான பல போராட்டங்களை நாளும் கண்டு, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து, ஜனநாயகத்தையும், சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற எந்தத் தியாகத்தையும் செய்ய, என்றும் ஆயத்தமாகியுள்ள கூட்டணி.

இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளில் எவற்றிற்கும் கொள்கைக் குழப்பம் கிடையாது; திமுகதான் தலைமை தாங்கும் கட்சி, திமுக தலைவர்தான் முதல்வர் வேட்பாளர் - கூட்டணிக்கு என்பதை திமுக கேட்காமலேகூட பிரகடனப்படுத்தும் அரசியல் பக்குவமும், தெளிவும் உள்ள ஒரு கூட்டுக் குடும்பம் போன்ற அணியாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே (2019-க்கு முன்பிருந்தே) கட்டுக்கோப்புடன் உருவாகி, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தட்டிப் பறித்து, மத்திய - மாநில ஆளுங்கட்சியின் ‘‘புஜ, பல, பராக்கிரமத்தை’’ வீழ்த்திய வெற்றிக் கூட்டணியாக சாதித்துக் காட்டியது.

இந்திய ஜனநாயகத்தை இன்றும் உறுதியோடு நாடாளுமன்றத்தில் துடிப்புடன் காப்பாற்றி வரும் முதல் சிப்பாய் - சேனையாக - திமுகவும், அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் உள்ளனர் என்பதை எவரேனும் மறுக்க முடியுமா?

வீண் அற்பக் கனவு காண வேண்டாம்

இந்தக் கூட்டணியில் கலகம் உண்டாக்க தேவையற்ற வீண் கற்பனைகளைச் செய்திட சில ஊடகங்கள் - தொலைக்காட்சிகள் உருவாக்கி, அதன்மூலம், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த விஷமத் ‘திருப்பணியை’ நடத்தி, திமுக தலைமையிலான கூட்டணியைக் கலைக்கலாம் அல்லது கலகலக்க வைக்கலாம் என்று வீண் அற்பக் கனவு காண வேண்டாம்.

இதன் தலைவராக உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணியிலிருந்து வந்து பழுத்த அனுபவத்தைப் பெற்றதோடு, மிகுந்த பொறுப்புணர்வுடன் கூட்டணிக் கட்சியினரையும் அரவணைத்து, மதித்துச் செல்லும் பண்பை இயல்பாகவே பெற்ற சிறப்புமிகு ஆற்றலாளர்.

பற்ற வைக்கும் முயற்சி ஒருபோதும் அவர்களுக்கு வெற்றி தராது

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், சில ஊடகங்கள் மூலம் இப்படி சில ‘‘செப்படி’’ வித்தைகள், சில்லுண்டிக் கற்பனைகள் - திமுக சொல்லாததை மட்டுமல்ல; எண்ணாததைக்கூட இவர்கள் ஏதோ அருகில் இருந்து கேட்டு, பார்த்து எழுதுவதுபோல் அல்லது பேட்டிகள் மூலம் ‘பற்ற வைக்கும்‘’ முயற்சி ஒருபோதும் அவர்களுக்கு வெற்றி தராது.
அவ்வளவு பலவீனமான கட்சிகள் எதுவும் திமுக கூட்டணியில் இல்லை; எஃகு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை.

திமுக தலைவரின் அறிக்கை

இதனை சரியான நேரத்தில் நேற்று (12.10.2020) திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வறிக்கை, வினைத் திட்பமும், காலமறிதலும், புரிந்து செயல்படும் தலைவர் அவர் என்பதை அனைவருக்கும் புரியவைக்கக் கூடியதாக உள்ளது.

''200 தொகுதிகளுக்குமேல் திமுக போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மய்யமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவுப்பு வெளியாகி கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல; இரண்டு, மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை; இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல.

திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அதிகாரபூர்வமாக முடிவெடுத்து அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே, 200 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற அனுமானமும், அதன் தொடர்பான விவாதங்களும், தேவையற்றவை மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டவையும் ஆகும் என்று தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

கூட்டணியின் பாதையும், பயணமும், தெளிவும், திட்பமும் வாய்ந்தவை, எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது. அதீதமான கற்பனை மற்றும் அளவில்லாத யூகத்தின் அடிப்படையில் எதையாவது சொல்லி, வலிவுடனும், பொலிவுடனும் திகழும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்.

திமுக கூட்டணியை அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. வெற்றிக் கூட்டணியாம் திமுக கூட்டணியின் பாதையும், பயணமும், தெளிவும், திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்குப் பிறகும் ஊடகங்கள் தங்களை முறைப்படுத்திக் கொள்ள முன்வராவிட்டால், அதன் நட்டம் திமுகவுக்கு அல்ல, கற்பனைச் சரடுகளை விடும் அவர்களுக்கேதான் என்பதைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.

‘கண்ணிவெடியை’’ அடையாளம் காணுவீர்

கூட்டணிக் கட்சித் தலைவர்களும்கூட இந்தக் ‘‘கண்ணிவெடியை’’ அடையாளம் கண்டு மிகவும் கவனத்துடன் தங்களது கருத்துக் கூறல்களை - போக்கை அமைத்துக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

வெண்ணெய் திரண்டு வரும்போது சட்டியை உடைக்க முயலுபவர்களை சரியாக அடையாளம் கண்டு, மூலையில் உட்கார வைப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையாக இருக்கவேண்டும்”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x