

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தருவதாக இருந்தது. ஆனால், முதல்வரின் தாயாரின் திடீர் மறைவால் அந்நிகழ்ச்சி ரத்தானது.
இந்நிலையில், முதல்வரின் வருகையையொட்டி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சியர் கண்ணன், மாவட்ட எஸ்.பி பெருமாள், டிஆர்ஓ மங்களராமசுப்ரமணியன் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 10 பேருக்கு தொற்று உறுதியானது.
கரோனா தொற்று உறுதியான பத்து பேரில் பலர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துசெல்லும் ஊழியர்கள் என்பதால் உள்ளூர்வாசிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.