

ராமேசுவரம் அருகே ஏர்வாடி கடற்கரையில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவரால் மணல் சிற்பம் வரைந்து நூதன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு ராமேசுவரம் அருகே சின்ன ஏர்வாடி கிராமத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் உலக பெண் குழந்தைகள் தின வரலாறு குறித்து பேடு நிறுவன திட்ட இயக்குனர் மன்னன் மன்னர் எடுத்துரைத்தார்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்து சின்ன ஏர்வாடி துவக்கப் பள்ளி ஆசிரியர் ராஜலக்ஷ்மி உரையாற்றினார். பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்து மீனவர் சங்க தலைவர் முத்துராணி மற்றும் கிராமத் தலைவர் செல்லம்மாள் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
சின்ன ஏர்வாடி கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர் முகேஷ். இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஏர்வாடி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து விழிப்புணர்வு அளித்தனர்.
பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டப்பட்டு அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கையில் பதாகைகள் ஏந்திய வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் கொண்ட கயிறு கட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட மேலாளர்கள் பவுன்ராஜ், தேவ் ஆனந்த், களப்பணியாளர்கள், அபிராமி, தேவி, முனி, ராம்கி ஆகியோர் செய்திருந்தனர்.