காக்கிநாடாவுக்கு அருகே கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி ஏனாம் பிராந்தியம்

வெள்ளக்காடான புதுச்சேரி ஏனாம் பிராந்தியம்.
வெள்ளக்காடான புதுச்சேரி ஏனாம் பிராந்தியம்.
Updated on
1 min read

ஆந்திரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கடந்ததால் புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கனமழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (அக். 13) கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடாவுக்கு அருகிலுள்ள கடற்கரை அருகே இன்று காலை கடந்தது. இதனால் ஆந்திரத்தின் 5 மாவட்டங்களில் பெரும் மழை பொழிவு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திர கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் காலை வரை மழை இருந்தது. தாழ்வான பகுதியெங்கும் மழை நீரும், வெள்ள நீரும் தேங்கியுள்ளது.

தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், "ஏனாமில் உள்ள மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

ஏனாம் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "ஏனாம் காவல் நிலையம், வழிபாட்டு தலங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம், சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் மழை நீரால் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதியில் வசித்து வந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மட்டக்குரா என்ற பகுதியில் குடிசை வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. இதே போல் ஜூக்கிய நகர், அஞ்சம்காட்டா போன்ற பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in