

தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் சேலம் மாவட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை (அக். 13) 1.00 மணியளவில் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் பழனிசாமி, தன் தாயாரின் மறைவு செய்தியை அறிந்து சேலம் விரைந்தார். இன்று அதிகாலை சேலம் வந்தடைந்த முதல்வர் பழனிசாமி, சிலுவம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தமது தாயாரின் உடலுக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, சரோஜா, எஸ்.பி.வேலுமணி, கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேஷ் தாஸ், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
காலை ஒன்பது மணி அளவில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதல்வர் பழனிசாமியின் குடும்பத்தினர், உறவினர்கள், சிலுவம்பாளையம் கிராம மக்கள், அதிமுகவினர் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் இல்லத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.
மறைந்த தவுசாயம்மாளுக்கு, விஜயலட்சுமி என்ற மூத்த மகளும், கோவிந்தராஜ், முதல்வர் பழனிசாமி என இரு மகன்களும் உள்ளனர்.