Last Updated : 13 Oct, 2020 10:37 AM

 

Published : 13 Oct 2020 10:37 AM
Last Updated : 13 Oct 2020 10:37 AM

கரோனா ஊரடங்கால் குறைந்திருந்த நிலையில் மாநகரில் மீண்டும் விபத்துகள் அதிகரிப்பு - ‘சலான்’ முறையால் அபராதத் தொகை வசூல் பாதிப்பு

கோவை மாநகரில் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கின்றன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தினசரி ஏராளமான எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 90 முதல் 150 சாலை விபத்துகள் பதிவாகின்றன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு, குறைந்தபட்ச தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் சில மாதங்களில் விபத்துகள் பதிவாகவில்லை. அதேசமயம், தனியார் மற்றும் பொது வாகனப் போக்குவரத்துக்கு முழு அளவில் அனுமதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மாநகர காவல் துறையின் புள்ளிவிவரப்படி, நடப்பாண்டு ஜூலையில் 54, ஆகஸ்டில் 58, செப்டம்பரில் 77 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில், ஜூலையில் 5 பேர், ஆகஸ்டில் 7 பேர், செப்டம்பரில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் 89, ஆகஸ்டில் 92, செப்டம்பரில் 84 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஜூலையில் 9, ஆகஸ்டில் 17 பேர், செப்டம்பரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரி சராசரியாக 4 ஆயிரம் பேர் மீது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராத சலான் அனுப்பப்படுகிறது. இதுவரை ரூ.15 கோடியே 92 லட்சத்து 41 ஆயிரத்து 820 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடியே 90 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘விபத்துகள் அதிகரிப்பதை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு ஆன்லைன் மூலம் அபராத சலான் அனுப்பப்படுகிறது. இந்த சலானுக்குரிய தொகை முழுமையாக வசூலிக்கப்படுவதில்லை. அபராதத் தொகை விதிக்கப்பட்டது தெரிந்தால்தான், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீண்டும் விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டுவர். மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு குறுந்தகவலும் வராது. இதனால் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதே தெரியாத சூழல் உள்ளது. இந்த இடர்பாட்டை தவிர்க்கவும், நிலுவைத் தொகையை வசூலிக்கவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) முத்தரசு கூறும்போது,‘‘மாநகரில் நடப்பாண்டு 523 விபத்துகள் ஏற்பட்டு, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 829 விபத்துகள் ஏற்பட்டு, 107 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டை விட நடப்பாண்டு 37 சதவீதம் விபத்துகளும், 55 சதவீதம் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. நடப்பாண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ‘காவலர் மின்னணு கண் செயலி’ மூலம் 2,28,357 வழக்குகள், கேமராக்கள் மூலம் 3,08,282 வழக்குகள், நேரடித் தணிக்கை மூலம் 3,76,789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டதில் இதுவரை 40 சதவீதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவர்களில் பொதுப் போக்குவரத்து வாகனம் பயன்படுத்துபவர்கள் வாகனப் பதிவை புதுப்பிக்கும்போது செலுத்திவிடுவர். சொந்த வாகனம் பயன்படுத்துபவர்கள் வாகனத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ கட்டாயம் நிலுவையில் உள்ள தொகையை செலுத்த வேண்டும்.

ஆவணம் தேவையில்லை

பொதுமக்கள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் ஆவணத்தை உடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ‘பரிவாஹன்’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, தங்களது வாகன விவரங்கள், ஓட்டுநர் உரிமம் விவரங்களை பதிவு செய்யவேண்டும். அதை காவல் துறையினரிடம் காட்டினாலே போதுமானதாகும்’’ என்றார்.

காவலர் மின்னணு கண் செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டுகோள்

மாநகர காவல்துறையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காவலர் மின்னணு கண் (Police e-eye) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்னலில் நிற்காமல் செல்தல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் செல்தல் உள்ளிட்ட விதிமீறல்களை காணும் பொதுமக்கள், சம்மந்தப்பட்ட வாகன எண்ணுடன் சேர்த்து, இந்த செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

இதன்மூலம் வட்டாரப் போக்குவரத்து துறை உதவியுடன், வாகன எண்ணை பயன்படுத்தி, முகவரியை கண்டறிந்து, அவர்களுக்கு ஆன்லைன் சலான் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து துணை ஆணையர் முத்தரசு கூறும்போது,‘‘கடந்த ஆகஸ்ட் வரை இந்த செயலியை 24,479 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 692 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x