

புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி கூற, இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவிக்க இப்பிராந்தியத்தில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரெஞ்சு-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1954ல் புதுச்சேரி பகுதிகளான தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி,காரைக்கால், ஆந்திரத்தை யொட்டியுள்ள ஏனாம், கேரளத்தை யொட்டியுள்ள மாஹே இந்தியாவில் இணைந்தன. ‘4 பிராந்தியங்கள் அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்’ என்று அப்போதைய பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார்.
கடந்த 1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்க நடவடிக்கையை தொடங்கினார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆதரவு தெரிவித்தார். இதை எதிர்த்து புதுச்சேரியில் கடும் போராட்டம் ஏற்பட்டது. அரசு அலுவலகங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டு 10 நாட்கள் வரைபோராட்டம் நீண்டது. வன்முறையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இணைப்பு முடிவை மத்திய அரசு கைவிட்டது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. கடந்த மாதம் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டவுடன் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பாஜக மத்திய அரசிடம் புகார் அளித்தது.
‘முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது’, என்று கூற, அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக மனு அளித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி மாநில அரசின் நில உரிமையை பறித்து விட்டனர்.
நிதியும் தருவதில்லை.ரேஷனில் அரிசி போடமுடிய வில்லை. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. தீபாவளிக்கு ஏழை மக்களுக்கு இலவச துணி தர மறுப்பு தெரிவித்து பணத்தை வழங்குமாறு கூறிவிட்டனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தோடு புதுவையை இணைக்க பா.ஜனதா திட்டமிடுகிறது என குறிப்பிட்டேன். புதுச்சேரி அரசிடம் இருந்த நிலம், நிதி, மக்கள் திட்டங்களுக்கான அதிகாரங்களை பறித்து தமிழகத்தோடு இணைப்பது என்பதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசின் சதி திட்டம்” என்றார்.
கூட்டணிக்கட்சியான திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்விடம் கேட்டதற்கு, “மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு புதுச்சேரியில் இருந்தும், அந்த அரசின் அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளைக்கூட செயல்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.
மத்திய அரசு நியாயமாக தர வேண்டிய நிதிகளை வழங்காதது உள்ளிட்ட பல செயல்களால் புதுச்சேரியை மத்திய அரசோடு இணைக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது. அதனால் முதல்வர் கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி ஒரு காலமும் பலிக்காது. திமுக போராடும்” என்று குறிப்பிட்டார்.
அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, “சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இணைப்பு தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் தெரிவித்துள்ளார். கரோனா வைரசை விட அசுர வேகத்தில் வதந்திகளை பரப்பக்கூடியதில் முதல்வர் நாராயணசாமி கைதேர்ந்தவர். வெறும் வாய் பேச்சுகளால் மற்றொரு மாநிலத்தோடு ஒருயூனியன் பிரதேசத்தை இணைத்துவிட முடியுமா? இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டாமா? புதுச் சேரி மக்களின் கருத்துக்களை அறியாமல் எந்தக் கட்சியாக இருந்தாலும் இதனை செய்துவிட முடியுமா? அப்படி செய்வதற்கு முயற்சித்தால் அதற்கான அடிப்படை ஆதாரங்களை காங்கிரஸ், திமுக கூட்டணியினர் மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா” என்று குறிப்பிட்டார்.
பாஜக மாநிலத்தலைவர் சாமி நாதன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி காங்கிரஸ் அரசு மக்களிடம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. வரும் தேர்தலுக்காக, நாராயணசாமி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறார். தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கலவரத்தை தூண்டும் வகையில் முதல்வர் பேசியுள்ளார். மத்திய அரசு மாநிலத்தை மாநிலத்தோடு இணைத்ததில்லை. நிர்வாக காரணங்களுக்காக பிரித்து, தனியாகதான் மாநிலங்களை உருவாக்கியுள்ளனர்.
முதல்வரின் கருத்து இறையாண்மைக்கு எதிரானது.பிரதமருக்கும், உள்துறைக் குக்கும் கடிதம் எழுதுவேன்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி மக்களின் கருத்துக்களை அறியாமல் எந்தக் கட்சியாக இருந்தாலும் இதனை செய்துவிட முடியுமா? இப்பிராந்தியத்தில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.