கேன்சரால் மனைவி உயிரிழப்பு; மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை: காவல் துறையினர் விசாரணை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குடியாத்தம் அருகே கேன்சரால் உயிரிழந்த மனைவியின் உடல் அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் கஸ்பா அருகேயுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60). நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா (58). இவர்களது மகன் மோகன் (38), குடியாத்தம் அடுத்த எம்.வி.குப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பத், சுலோச்சனா தம்பதியினர் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கேன்சர் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்ட சுலோச்சனா கடந்த 10-ம் தேதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை யாருக்கும் தெரிவிக்காத சம்பத், மனைவியின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினமும் வீட்டைவிட்டு சம்பத் வெளியே வரவில்லை. மனமுடைந்த அவர் மனைவியின் உடல் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையில், சம்பத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்றனர்.

கதவு பூட்டப்படாமல் இருந்ததால் உள்ளே சென்றவர்கள் இருவரும் உயிரிழந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுலோச்சனா உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் காவல் ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in