

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மீனா ஞானசுந்தரம்.. இவருக்கு கோவிலம்பாக்கம் 200 அடி சாலையில் சொந்தமான நிலம் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் இருந்த மண்ணை திருடிச் சென்றது தொடர்பாக, மீனா அண்மையில் கோவிலம்பாக்கம் அதிமுக பிரமுகர் கன்னியப்பன் மீது, பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் கன்னியப்பன் தனது உறவினர்கள் மற்றும் அடியாட்களுடன் அதே இடத்தில் பணியில் இருந்த காவலாளியை தாக்கி மிரட்டி சாவியை பறித்துக்கொண்டு, அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்துவிட்டு காவலாளி, நில உரிமையாளர் மீனாமற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மீனா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கொடுத்தார்.
இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அதிமுக பிரமுகர் கன்னியப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.