Published : 16 Sep 2015 07:32 AM
Last Updated : 16 Sep 2015 07:32 AM

பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தது: போகியன்று செல்வதற்கான முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் முடிவடைந்தது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், ஜனவரி 13-ம் தேதி போகிக்கு முதல் நாள் செல்வதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

டிக்கெட் முன்பதிவு செய் வதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முன்பதிவு மையங்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் பாலான ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட இருக் கைக்கான முன்பதிவு தீர்ந்து விட்டது.

குறிப்பாக, பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி, முத்துநகர், மன்னை, மலைக்கோட்டை, சேரன், நீலகிரி உள்ளிட்ட விரைவு ரயில்களில் 8 முதல் 10 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு தீர்ந்தன. கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்களில் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். நெல்லை விரைவு ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 350-ஐ எட்டியுள்ளது.

மேலும், இணையதளங்கள் மூலம் பெரும்பாலானோர் முன்பதிவு செய்ததால், முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, ஜன.14-ம் தேதி போகியன்று செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x