

சென்னை மாநகரில் உள்ள 4,127 உட்புறச் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான நிதியில் 50 சதவீதத்தை கடனாகப் பெற மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் நடப்பு நிதியாண்டில் ரூ.707 கோடியே 40 லட்சம் செலவில் 5,142 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தேசித்திருந்தது. இப்பணிகளுக்காக தமிழ்நாடு அடிப்படை வசதிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்திடம் (டுபிட்கோ) மாநகராட்சி நிர்வாகம் கடன் வழங்கக் கோரியிருந்தது.
ஆனால் டுபிட்கோ மாநகரப் பகுதியில் உள்ள 2,169 தார் சாலைகள் மற்றும் 1,958 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அடங்கிய மொத்தம் 4,127 உட்புற சாலைகளை சீரமைக்கவும், அதற்கு ஆகும் செலவான ரூ.393 கோடியே 97 லட்சத்தில் 50 சதவீத தொகையை கடனாக வழங்கவும் ஒப்புக்கொண்டது. மீதம் 50 சதவீத நிதியை மாநகராட்சி சார்பில் செலவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மாநகராட்சி நிர்வாகம் 50 சதவீதத் தொகையான ரூ.196 கோடியே 99 லட்சத்தை கடனாக பெற நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலை பணிகளுக்காக தமிழ்நாடு அடிப்படை வசதிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்திடம் (டுபிட்கோ) மாநகராட்சி நிர்வாகம் கடன் வழங்கக் கோரியிருந்தது.