Last Updated : 12 Oct, 2020 10:37 PM

 

Published : 12 Oct 2020 10:37 PM
Last Updated : 12 Oct 2020 10:37 PM

தேவேந்திர குல வேளாளர் ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுக்கள் தாக்கல்

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு 4.3.2019-ல் பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யவும், தடை விதிக்கக்கோரியும் திருச்சி டி.வளவனூரைச் சேர்ந்த எம்.அமர்நாத், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தமிழகத்தில் எஸ்சி பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி மற்றும் காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கி, 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

எஸ்சி பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ, பிரிக்கவோ நாடாளுமன்றத்துக்கு தான் அதிகாரம் உண்டு. இது தொடர்பாக குடியரசு தலைவர் தான் அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும். மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்ற வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஜாதி பிரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் மற்றும் 1981-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கவும், மனுவை தள்ளுபடி செய்யக்கோரியும் தமிழர் விடுதலை களத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மூவேந்தர் புலிப்படைத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சாதி தொடர்பாக ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவில் மனுதாரர் சமூக பெண்களை தவறாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் வெளியேற்றம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மனு மட்டுமே கொடுத்துள்ளோம். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அக். 14 விசாரணைக்கு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x