

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் விரைவில் நலம்பெற திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இருவரிடமும் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
கடந்த வாரம் திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் குறித்து அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவரிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை அறிந்த ஸ்டாலின், அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவு:
“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அருமை நண்பர் கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்தி அறிந்தேன். தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். நலம்பெற்று வருவதாக அவரும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து, அவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
இருவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.