'எந்திரன்' கதைத் திருட்டு விவகாரம்; வழக்கு விசாரணைக்குத் தடை கோரி இயக்குநர் ஷங்கர் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

'எந்திரன்' கதைத் திருட்டு விவகாரம்; வழக்கு விசாரணைக்குத் தடை கோரி இயக்குநர் ஷங்கர் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

'எந்திரன்' திரைப்படக் கதைத் திருட்டு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் கதாசிரியர் வழக்குத் தொடர்ந்தார். கீழமை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் தன்னை விசாரிக்க அனுமதி வழங்கிய உத்தரவுக்குத் தடைகோரிய இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ஜுகிபா கதை, 'திக்திக் தீபிகா' என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படம் வெளியானது.

அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடைய 'ஜுகிபா' கதை எனக்கூறி, 'எந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், எதிர்த்தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், தான் எழுதிய கதையைத் திருடி 'எந்திரன்' படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என்பதால் இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சட்டப்படி செல்லாது, நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதான வழக்கு செல்லாது என உத்தரவிட்டது. அதேவேளையில், இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது எனத் தெரிவித்தது.

மேலும், கதை ஒரே மாதிரி உள்ளதால் காப்புரிமை மீறலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கை எழும்பூர் கீழமை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு மூலம் எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் 'எந்திரன்' கதைத் திருட்டு தொடர்பான ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in