

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, களக்காடு, வள்ளியூர், அம்பாசமுத்திரம் ஆகிய 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 189 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற கோரியும், கரோனா காலத்தில் மக்களை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் செ. லட்சுமணன், மாநகர செயலாளர் எஸ். நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
களக்காடு அண்ணா சிலையருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் வள்ளியூரில் 52 பேரும், அம்பாதமுத்திரத்தில் 37 பேருமாக மாவட்டத்தில் மொத்தம் 4 இடங்களில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 189 பேர் கைது செய்யப்பட்டனர்.