Published : 12 Oct 2020 04:27 PM
Last Updated : 12 Oct 2020 04:27 PM

நீலகிரி ஆட்சியர் பெயரில் மோசடி மின்னஞ்சல்; அதிகாரிகள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பரிசுகள் காத்திருப்பதாக அரசு அதிகாரிகளுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

இணையம் மூலம் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. சமீபகாலமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பெயரில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே அதிகாரிகளுக்கு மோசடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக ஜெ.இன்னசென்ட் திவ்யா கடந்த 4 ஆண்டுகாலமாகப் பதவி வகித்து வருகிறார். ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்குக் கடந்த சனிக்கிழமை (அக். 10) மாலை ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பரிசுக் கூப்பன்கள் உள்ளன. அந்தக் கூப்பன்களை வாங்கிக் கொள்ளுங்கள். நான் அதற்கான பணத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்க, ஆட்சியர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா,
"பிரபல நிறுவனத்தில் பரிசுத்தொகை மற்றும் பரிசுக் கூப்பன்களை வாங்குங்கள். அதற்கான பணம் கொடுத்து விடுகிறேன் என என் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் என்னிடம் கூறினர். அதிகாரிகளுக்கு எனது அலுவலக மின்னஞ்சல் முகவரியான collrnkg.nic.in மூலமே மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. இந்தப் போலி மின்னஞ்சல் எனது பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

நான் உடனடியாக இதுகுறித்துக் காவல்துறையில் புகார் அளித்தேன். மேலும், அதிகாரிகளுக்கு இத்தகைய மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளேன். இந்தத் தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "மோசடி நபர்கள் போலியான ஹைப்பர்லிங்க், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படுகின்றன. ஆட்சியரின் பேரில் உள்ள மின்னஞ்சல் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இத்தகைய மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால், அவற்றைப் புறந்தள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x