

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 30 பேருக்கு ரத்தம் சுத்திகரிக்கும் வசதி உள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2015 முதல் 4 இயந்திரங்களைக் கொண்டு ரத்தம் சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையம் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு, 2 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 30 இயந்திரங்களைக் கொண்ட மையமாக மேம்படுத்தப்பட்டது.
எனினும், இங்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. இதை, மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தற்போது ஒரே நேரத்தில் 30 பேர் ரத்தம் சுத்திகரிப்பு செய்து கொள்ளும் அளவுக்கு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறுகையில், "மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முயற்சியினால் இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் மூலம் இங்கு டயாலிசிஸ் செய்யும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, இதன் மூலம் டயாலிசிஸ் செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் முன்பைவிட பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம்பு கடி மற்றும் நோய் தொற்று காரணமாக ஏற்படும் சிறுநீரக கோளாறுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு, கல்லீரலை தாக்கக்கூடிய வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் ரத்தம் சுத்திகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இங்கு, ரத்த நாள அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதோடு, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் ரத்த சோகைக்கு தேவையான இரும்பு சத்து ஊசிகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்திலும் தொடர்ந்து சிறுநீரக நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரத்த சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான ரத்த சுத்திகரிப்பு மையம் இம்மாவட்டத்திலேயே இம்மருத்துவமனையில் மட்டும்தான் உள்ளது.
அதன்படி, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.