Published : 12 Oct 2020 04:07 PM
Last Updated : 12 Oct 2020 04:07 PM

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கோயில் நகை தயாரிப்புக் கலைஞர்கள்: புவிசார் குறியீடு பெற்ற தொழில் காக்கப்படுமா? 

மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் ‘நாகர்கோவில் கோயில் நகைகள்’ தொழில் கரோனாவால் முற்றாக முடங்கிப் போயுள்ளது.

கோயில் நகை தயாரிப்புப் பட்டறைகளில் பணி செய்தோர் கட்டிட வேலை, வர்ணம் பூசுதல் என மாற்றுத் தொழில் நோக்கி நகர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவினை கலைப் பட்டியலில் வரும் கோயில் நகைகள் தயாரிப்புத் தொழிலைக் காக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஒவ்வொரு பகுதிக்கும் உரிய பிரத்யேகத் தொழில்கள், தயாரிப்புகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. அந்தவகையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் மட்டுமே பிரத்யேகமாகச் செய்யப்படும் கோயில் நகைத் தயாரிப்பு தொழிலுக்கும் மத்திய அரசு, புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இந்தத் தொழிலில் நாகர்கோவில், வடசேரி பகுதியைச் சேர்ந்த 40-க்கும் அதிகமான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. வழக்கமான தங்க நகை செய்யும் தொழிலில் இருந்து நுட்பமான சில விஷயங்களில் கோவில் நகைத் தயாரிப்பு மாறுபடுகிறது. இப்போது கரோனாவால் கோயில் விசேஷங்கள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள் ஆகியவை இல்லாததால் மிகவும் கஷ்டமான சூழலுக்குள் கோயில் நகை தயாரிப்புத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் பேசிய கோயில் நகைகள் தயாரிப்பில் சிறந்த கைவினைக் கலைஞருக்கான மாநில விருது பெற்ற முத்துசிவம் கூறியதாவது:

''கோயில் நகைகள் தயாரிப்பில் அடிப்படையாக வெள்ளி இருக்கும். உருவத்தின் அடிப்படை வெள்ளியாகவும், அதன் மேல் குச்சக்கல் என்னும் ஒருவகைக் கல்லை வைத்து அழகூட்டுவோம். அதன்மேல் 24 கேரட் சுத்தமான தங்கத்தின் இலை வைத்துப் பொதியப்படும். இது மிகவும் நுட்பமான வேலை. நெத்திச் சுட்டி, தலை சாமானம், மகரகண்டி மாலை, ராக்கொடி, மாங்காய் மாலை, ஜடைவில்லை, ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி என ஒரு செட்டில் 25-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் வரும். பரதக் கலைஞர்களும் இந்த கோயில் நகையைத்தான் பயன்படுத்துவார்கள்.

இதனால் வருடம் முழுவதும் சந்தை வாய்ப்பு இருந்து வந்தது. இருநூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் கோவில் நகைகள் செய்து அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கும், சென்னை, கேரளத்துக்கும் அனுப்பி வந்தோம். இப்போது இரண்டு விதமான சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் போய்க்கொண்டே இருக்கிறது. தூய்மையான ஒரு கிராம் தங்க இலையைத்தான் ஒவ்வொரு நகைக்கும் பயன்படுத்துவோம்.

எங்களுக்கான ஒரு கிராம் விலையே 5,500 ரூபாயாக இருக்கிறது. கரோனாவுக்கு முன்பு 38 ரூபாயில் இருந்த வெள்ளியின் விலை இப்போது இரட்டிப்புத் தொகையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கமும், வெள்ளியும் தொடர்ந்து விலை கூடுவதால் கோயில் நகைகளின் தயாரிப்புச் செலவும் கணிசமாகக் கூடிவிட்டது. இதனால் ஆர்டர் கொடுத்த பலரும் வேண்டாம் என்கிறார்கள். பரத நாட்டிய செட்டிற்கு கோயில் நகைகளை வாங்கியவர்கள் விலை உயர்வால் கவரிங்கின் பக்கம் திரும்பும் அபாயம் இருக்கிறது. இது கலைஞர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு.

இன்னொருபுறத்தில் உலக அளவிலான கரோனா பாதிப்பால் ஆலய விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள் முற்றாக ரத்தாகியுள்ளன. இதனால் எங்குமே பரத நாட்டிய நிகழ்ச்சிகள் இல்லை. இதனால் கோயில் நகைகளில் பரதநாட்டிய ஆபரணங்கள் வாங்கிய யாரும் இப்போது ஆர்டர் கொடுக்கவில்லை. வழக்கமாக பூஜை வைப்பு காலத்தில்தான் அதிக பரதநாட்டிய அரங்கேற்றங்கள் இருக்கும். கரோனாவால் அவை இல்லாத சூழலில் முக்கிய சீசனையும் இழந்துவிட்டோம்.

கோயில்களில் சாமிகளுக்கு ஆர்டர் செய்த நகைகளையும் கூட இப்போதைக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியால், ஆர்டர் கொடுத்தவர்கள் வாங்க வரவில்லை. கோவில் நகைகள் தொழில் மீள இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்போலத் தெரிகிறது. அரசு, நாங்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் கோயில் நகைகள், பரத ஆபரணங்களை பூம்புகார் வழியாகக் கொள்முதல் செய்தால் பெரிய உதவியாக இருக்கும்.''

இவ்வாறு முத்துசிவம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x