வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமியின் 14 உத்தரவுகள்

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி.
Updated on
3 min read

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தொடர்புடைய துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஏற்கெனவே, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் 18.9.2020 அன்று வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆயத்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்களுடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் ஆயத்தப் பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வடகிழக்குப் பருவமழையினால் உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய 4,133 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 14 ஆயிரத்து 232 பெண்கள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 409 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்கள், தயார் நிலையில் உள்ளனர். கால்நடைகளைப் பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் மற்றும் 691 ஊர்க்காவல் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பேரிடர் பாதிப்புகளைத் தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11 ஆயிரத்து 482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,299 ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 4,154 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 7,989 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. 7.53 கோடி கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, 6 லட்சத்து 70 ஆயிரத்து 864 விவசாயிகள் இதனால் பயன்பெற்றனர். இதனால் 2.55 டி.எம்.சி கூடுதல் நீரினைச் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 387 பாலங்கள் மற்றும் 1 லட்சத்து 9,808 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பு உள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜேசிபி இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை பேரிடர்களின் காரணமாக எழும் சிக்கல்களைத் தீர்க்கவும், குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மின்கம்பங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் பருவமழை காலத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்:

- பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களின் செயல் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரிப் பயிற்சிகள், கரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும்.

- பேரிடர் காலங்களில் கரோனா பரவலைத் தடுக்க, பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போதும், பொது இடத்தில் தங்க வைக்கும்போதும், முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்.

- தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலைத் தவிர்க்க வேண்டும்.

- பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்கள், தனிமனித இடைவெளியுடன் தங்க வைக்கப் போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

- மழைக்காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்றத் தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

- வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

- தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், போதுமான அளவு மருந்துகள் இருப்புடன், தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனையிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

- பேரிடர் காலங்களில் இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள், நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் / பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

- வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க, அனைத்துத் துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்".

இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in