ராணுவத்தில் பணிபுரியும் தமிழக இளைஞரின் உடல்நிலை குறித்து தகவல் கிடைக்க உதவ வேண்டும்: பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

ராணுவத்தில் பணிபுரியும் தமிழக இளைஞரின் உடல்நிலை குறித்து உரிய தகவல் கிடைக்க உதவிட வேண்டும் என, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 12) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதம்:

"தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவரது அடையாள எண் 2621258L.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கின்ற ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்பு, செல்பேசியில் தகவல் கூறி இருக்கின்றார். அதன்பிறகு, அந்த செல்பேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்திய ராணுவத்தில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கின்ற கோரிக்கை விண்ணப்பத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

முல்லைராஜ் இருப்பு - உடல்நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் கிடைக்க உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்.

மேலும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு வைகோ பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in